குப்பைமேனி பயன்கள்

குப்பைமேனி பயன்கள்

குப்பைமேனி தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?

குப்பைமேனி பல மருத்துவ குணங்களை பெற்ற அற்புதமான ஒரு மூலிகை செடி ஆகும். குப்பைமேனியின் தாவரவியல் பெயர் அகலிபா இண்டிகா.குப்பைமேனி Euphorbiaceae குடும்பத்தைச் சார்ந்தது.  

நமது மேனியில் உருவாகும் பல நோய்களை விரட்டுவதாலேயே குப்பைமேனி என்று பெயர் பெற்றது. உலகின் பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் குப்பைமேனி மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குப்பைமேனி பல இடங்களிலும் மிக சாதாரணமாக வளரும் ஒரு செடியாகும்.  இதைக் கீரையாகச் சமைத்து சாப்பிடும் வழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் உண்டு. மடகாஸ்கர் நாட்டில் குப்பைமேனி இலை சாறு  தோல் நோய்களுக்கு இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஆஸ்துமாவுக்கு மருந்தாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்த குப்பைமேனி.

குப்பைமேனி இலை எப்படி இருக்கும்?

குப்பைமேனியின் இலை பச்சைப்பசேலென முக்கோண வடிவமாக அரும்பு அரும்பாக இருக்கும். ஒரு சில இடங்களில் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக சிறிய அளவில் இருக்கும். 

குப்பைமேனி பயன்கள்

1.சொறி சிரங்குக்கு குப்பைமேனி

நமது விரல் இடுக்குகளில் ஏற்படும் சொறி, சிரங்கு, தொடை இடுக்குகளில் ஏற்படும் படர்தாமரை போன்றவற்றுக்கு குப்பைமேனி  ஒரு அருமையான மருந்தாகும்.  குப்பைமேனி இலையை அரைத்துப் போட  அவை விரைவில் குணமாகும்.

2.சளியை கட்டுப்படுத்தும் குப்பைமேனி

 குப்பைமேனி இலையை காய வைத்து பொடி செய்து ஒரு கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க இருமல் குணமாகும். சில பேருக்கு தலையின் நீரேற்றத்தால் தலை பாரமாக இருக்கும். அவர்களுக்கு குப்பைமேனி இலையை அரைத்து  பத்து போட்டால் தலைபாரம் குறைந்து விடும். 

குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலைக் கட்டுப்படுத்த இதன் இலைச்சாறு ஐந்து துளியும் துளசி இலைச்சாறு ஐந்து துளியும் கலந்து கொடுக்கலாம்.

3.மலச்சிக்கலுக்கு விடுதலை

மலச்சிக்கல் பிரச்சனை உடனே தீர குப்பைமேனி இலை சாறை பயன்படுத்தலாம்., குப்பைமேனி இலைச்சாறு அரை ஸ்பூன் எடுத்து அரை டம்ளர் வெந்நீரில் கலந்து கொடுக்க, மலச்சிக்கல் நீங்கும்,  மேலும் வயிற்றில் உள்ள புழுக்களையும் அழித்து வெளியேற்றும்.

4.உடல் வலியில் இருந்து விடுதலை

 குப்பைமேனி இலை சாற்றை நல்லெண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது உடல் வலியிலிருந்து விடுதலை கிடைக்கும். வயதானவர்களுக்குக் கால் மூட்டுக்களில் ஏற்படும் வலியுடன் கூடிய வீக்கங்களுக்கு, குப்பைமேனி இலையைச் சுண்ணாம்புடன் கலந்து பூசலாம்.

5.வாயு நீங்க குப்பைமேனி 

குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி சிறுநெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட, உடலில் தோன்றும் வாயுக்கோளாறுகள் நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பத்து குப்பைமேனி இலைகள், இரண்டு சின்ன வெங்காயம், சிறிது வாழைப்பூ சேர்த்து அரைத்து, சிறுநெல்லி அளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட, மூல நோயில் வடியும் ரத்தம் நிற்கும்.

6.உடல் உஷ்ண பாதிப்புக்கு குப்பைமேனி

உஷ்ணக்கொதிப்பால் அவதிப்படுபவர்கள், குப்பைமேனி இலை பசையை எலுமிச்சை சாறுடன் கலந்து பூசலாம். இது உஷ்ண கொதிப்பை அடக்கும்.

குப்பைமேனி தீமைகள்

இதில் பல ஆல்கலாய்டுகள் ஹைட்ரோசியானிக் அமிலம் உள்ளதால் உண்ணும் போது கவனம் தேவை .குப்பைமேனியில் கருவுறுதலைத் தடுக்கும் பண்புகள் உள்ளன, எனவே கர்ப்பத்தைத் திட்டமிடுபவர்கள் குப்பைமேனியை தவிர்க்க வேண்டும்.

குப்பைமேனியை மருந்தாக மேற்சொன்ன அளவுகளில் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் வாந்தி, கழிச்சல் உண்டாகும் ஆபத்து உண்டு. குப்பைமேனியை எவ்வாறு உண்டு பயன்பெறலாம் என்பதை அருகில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் அல்லது நாட்டு மருத்துவர்களிடம் கேட்டு ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

Also Read: திரிபலா சூரணம் பயன்கள், தூதுவளை பயன்கள்,

பப்பாளி இலை நன்மைகள்

Leave a Comment