நமது மேனியில் உருவாகும் பல நோய்களை விரட்டுவதாலேயே குப்பைமேனி என்று பெயர் பெற்றது. உலகின் பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் குப்பைமேனி மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குப்பைமேனி பல இடங்களிலும் மிக சாதாரணமாக வளரும் ஒரு செடியாகும்.
குப்பைமேனி இலை அழகு குறிப்புகள்
முகத்தில் உள்ள முடிகளை நீக்க
சில இளம் பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளரும் பிரச்சனைகள் இருக்கும். இது அவர்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது. குறிப்பாக உதட்டின் மேல் தாடைகளில் கன்னங்களில் சிலருக்கு முடிகள் அளவுக்கு அதிகமாக வளர்ந்து பார்ப்பதற்கு சற்று கருப்பு தடமாக இருக்கும்.
அவ்வாறு அவதி பெறும் பெண்களுக்கு குப்பைமேனி இலை ஒரு வரப் பிரசாதம் ஆகும். குப்பைமேனி இலையை ஒரு பத்து எடுத்து விராலி மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின் இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவிக் கொண்டு தூங்கவும். மறுநாள் காலை அவை முடியோடு உதிர்ந்து வெளியேறிவிடும்.
Also Read: குப்பைமேனி பயன்கள்
பருக்கள் நீங்கும்
பரு என்றாலே பச்சிலை வைத்தியம் தான். அதுவும் குப்பைமேனி பச்சிலை பருக்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். முகத்தில் அளவுக்கு அதிகமாக பரு உண்டாகும் போது அவை நமது சருமத்தில் தழும்புகளை உருவாக்கி விடும். இவ்வாறு ஏற்படும் தழும்புகள் நமது முகத்தின் அழகையே சில சமயம் கெடுத்து விடும். மேலும் மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு கூடுதலாக பருத்தொல்லைகள் ஏற்படும்.
இவர்கள் குப்பை மேனி இலையுடன் கற்றாழை சாறை எடுத்து இரண்டையும் மசித்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் பற்று போடவும். அவை காய்ந்ததும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் பருக்கள் குறைய தொடங்கும்.
அம்மை தழும்புகள்,வடுக்கள் நீங்க
நம்மில் பல பேருக்கு அம்மை வந்து இருக்கும். அதற்கு அடையாளமாக நமது உடம்பில் அம்மை தழும்புகள் இருக்கும். சிலருக்கு புண்களால் அல்லது பருக்களால் வடுகள் கூட இருக்கலாம். இவர்கள் அனைவரும் குப்பைமேனியை பயன்படுத்தி வடுக்கள் தழும்புகளை நீக்கிவிடலாம்.
குப்பைமேனி இலையை எடுத்து அதில் கற்றாழை சாறு கொஞ்சம் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் அதனுடன் கொஞ்சம் மஞ்சள் ஒரு பல் பூண்டு எடுத்துக்கொண்டு அரைத்துக் கொள்ளவும். இதனை தழும்புகள் மேல் தொடர்ந்து தடவி வர தழும்புகள் நீங்கும்.
குப்பைமேனி ஹெர்பல் ஃபேஷியல்
குப்பைமேனி இலைகளை கொண்டு முகத்துக்கு மூலிகை ஃபேஷியலும் செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
குப்பை மேனி இலை: 20 இலைகள்
புதினா: 20 இலைகள்
துளசி: சிறிதளவு,
வேப்பிலை: 5 இலைகள்
கெட்டி பசுந்தயிர் – சிறிதளவு அல்லது பசும்பால்,
வைட்டமின் E ஆயில் மாத்திரை – 1
மேற்படி சொன்ன இலைகளை சுத்தம் செய்து மிக்ஸியில் மைய அரைக்கவும். அதனுடன் கெட்டி பசுந்தயிர் சேர்த்து மசிய அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வைட்டமின் E ஆயில் மாத்திரை கலந்து குலைத்துக் கொள்ளவும். பிறகு முகத்தை சுத்தம் செய்து முகம் முதல் கழுத்து வரை பேக் போடவும். 30 நிமிடங்கள் வரை உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
புதினா வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது. குப்பைமேனி இலை முகத்தில் கரும்புள்ளிகள் இல்லாமல் செய்கிறது. முகத்தில் பருக்கள் வருவதையும் புண்களையும் வராமல் செய்கிறது. தயிர் இயற்கை முறையில் முகத்தை ப்ளீச் போன்று செயல்பட்டு முகத்தை சுத்தமாக்குகிறது.